கொசஸ்தலை ஆற்றில் முட்செடிகளால் விவசாய நிலங்கள் அரிப்பு அபாயம்
திருத்தணி:திருத்தணி தாலுகா, லட்சுமாபுரம் கிராமம் அருகே, கொசஸ்தலை ஆறு செல்கிறது. அந்த ஆற்றின் கரையோரம் அருகே, 1,000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டால் அந்த தண்ணீர் கொசஸ்தலை ஆறு வழியாக, திருவள்ளூர் அடுத்த, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றடைகிறது.மேலும், பருவ மழையின் வெள்ளம், அம்மப்பள்ளியில் திறக்கப்படும் தண்ணீர் ஒன்றாக சேர்ந்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.இந்நிலையில், பல ஆண்டுகளாக கொசஸ்தலை ஆற்றில் முட்செடிகள் மற்றும் கோரைபுற்கள் அதிகளவில் உள்ளதால் வெள்ளம் ஆற்றின் நடுவே செல்லாமல் கரையோரம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால், ஆற்றின் கரையோரம் விவசாய நிலத்தில் அரிப்பு ஏற்படுகிறது. மேலும், பயிர்களும் வெள்ளத்தால் அழிந்து போகிறது. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டம் அடைகின்றனர்.கடந்த மாதம் பெய்த மழை மற்றும் அம்மப்பள்ளி அணைக்கட்டு தண்ணீர் ஆற்றின் ஓரம் சென்றதால் விவசாய நிலம் அரிப்பு ஏற்பட்டுள்ளன.எனவே, லட்சுமாபுரம் விவசாயிகள், கொசஸ்தலை ஆற்றில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.