மாறம்பேடு ஏரி கரையை வெட்டி சவுடு மண் எடுப்பு மழைநீரை தடுப்பதால் விவசாயம் கடும் பாதிப்பு
சோழவரம்:குவாரி என்ற பெயரில், மாறம்பேடு ஏரியின் கரைகளை வெட்டி, சவுடு மண் எடுப்பதுடன், மழைநீர் வருவதை தடுத்து விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சோழவரம் அடுத்த மாறம்பேடு ஏரி, 250ஏக்கர் பரப்பு கொண்டது. ஏரியை சுற்றிலும் உள்ள பூதுார், ஆங்காடு, மாறம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட ஏரியில், 5,000 லோடு சவுடு மண் எடுக்க, தனியாருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதியின்போது, 'தண்ணீர் இல்லாத, வறண்ட பகுதியில், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் மண் எடுக்க வேண்டும். 0.90 மீட்டர் ஆழத்தில், ஒரே சீராக மண் எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து, அருகில் உள்ள இடத்தில் மண் எடுத்தால், கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படும்' என, அறிவுறுத்தப்டட்து. ஆனால், சவுடு மண் குவாரி எடுத்த ஒப்பந்ததாரர், அரசின் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், அனுமதி பெற்ற இடத்தை விட அருகில் உள்ள பகுதியிலும், விவசாய நிலங்களை ஒட்டி அமைந்து கரைகளை வெட்டியும், 15 - 20 அடி ஆழத்திற்கு மண் எடுத்து வருகின்றனர். மண் எடுப்பதற்கு தடையாக, ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரையும் ராட்சத மோட்டார்கள் உதவியுடன் வெளியேற்றினர். இதை கண்காணிக் வேண்டிய காவல், வருவாய், நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏரியின் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. அதிகப்படியான தண்ணீர் ஏரிக்கு செல்லவேண்டும். ஆனால், மண் அள்ளுவதற்காக விவசாய நிலங்களின் தண்ணீர் ஏரிக்கு வராமல் இருக்க மண்போட்டு தடுப்பு ஏற்படுத்தினர். விவசாய நிலங்கள் மூழ்கி பாழாகும் நிலை உள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கரைகளின் அருகில் மண் எடுக்க யார் அனுமதி அளித்தது. தற்போது ஏரியின் கரைக்கும் விவசாய நிலங்களுக்குமான இடைவெளி குறைந்து உள்ளது. இது மழைக்காலங்களில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். நீர்வளத்துறை அதிகாரிகள், பாதிப்பு குறித்து சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யாமல் சாலையில் நின்று, பார்வையிட்டு சென்றனர். தனிநபர் சுயநலத்திற்காக ஒரு ஏரியே கபளீகரம் செய்யப்படுவதுடன், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமாவது, இதில் கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.