உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 14ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் 14ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை:'திருத்தணி தொகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை செய்து தராததை கண்டித்து வரும் 14ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டசபை தொகுதியில், அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2021ல் தரம் உயர்த்தப்பட்ட, திருத்தணி அரசு மருத்துவமனையில், 45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, நான்கு மாடி கட்டடம், கடந்த ஏப்ரல் மாதம் பணிகள் முடிவதற்கு முன்பு, அவசர கதியில் திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களாகியும், பயன்பாட்டிற்கு வரவில்லை. 'ஸ்கேன்' எடுக்கும் அறை சிறிதாக கட்டப்பட்டதால், தற்போது இடிக்கப்பட்டு சரி செய்யப்படுகிறது. மக்கள் வரிப்பணம் பல்வேறு வழிகளில் வீணடிக்கப்படுகிறது. திருத்தணி நகருக்கு புறவழிச்சாலை அமைக்க, அ.தி.மு.க., ஆட்சியில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தி.மு.க., ஆட்சியில், கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு நடக்கும் பணிகள் தரமற்று உள்ளன. ரயில்வே பாதையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தில், இரண்டு பக்கமும் மின்விளக்கு வசதிகள் இல்லை.திருத்தணி புதிய பஸ் நிலையம் கட்ட, அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பில் பணி துவக்கப்பட்டது. இன்னும் பணிகள் முழுமை பெறாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். மக்களுக்கு அடிப்படை தேவைகளையும், நலன் பயக்கும் திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் வாயிலாக வரும் 14ம் தேதி, திருத்தணி கமலா திரையரங்கம் அருகே, காலை 9:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை