உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடிந்து விழும் அபாய நிலையில் அங்கன்வாடி, வி.ஏ.ஓ., அலுவலகம்

இடிந்து விழும் அபாய நிலையில் அங்கன்வாடி, வி.ஏ.ஓ., அலுவலகம்

திருவாலங்காடு:வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையம் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்துார் ஊராட்சியில், அரசு பள்ளி அருகே வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இக்கட்டடம் கட்டப்பட்டு, 25 ஆண்டுகளான நிலையில், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. மேலும், அருகே உள்ள வேப்பமரத்தின் வேர், சுவர் வழியாக புகுந்துள்ளதால், கட்டடம் விரிசல் அடைந்துள்ளது. மழைக்காலத்தில் கட்டடத்தில் நீர்க்கசிவதால், கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் பணியாற்ற வேண்டிய நிலைக்கு வருவாய் ஊழியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். மேலும், விண்ணப்பிக்க வருவோர் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அங்கன்வாடி மையம் திருவாலங்காடு ஊராட்சி கூடல்வாடி கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இக்கட்டடம் மூன்று ஆண்டுகளாக பழுதடைந்து, பயன்பாடின்றி உள்ளது. அங்கன்வாடி குழந்தைகள் தற்காலிகமாக நுாலகத்தில் பயின்று வருகின்றனர். மூன்றாண்டுகளாக பயன்பாடின்றி உள்ள அங்கன்வாடி மையம் இடித்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அங்கு செடிகள் வளர்ந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி