உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இழப்பீடு வழங்காததால் ஆத்திரம் காட்டூர் விவசாயிகள் சாலை மறியல்

இழப்பீடு வழங்காததால் ஆத்திரம் காட்டூர் விவசாயிகள் சாலை மறியல்

பொன்னேரி'பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில், 2,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு, மிக்ஜாம் புயலின்போது, சம்பா பருவத்திற்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாழாகின.தமிழக அரசு சார்பில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. பயிர் காப்பீடு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால், ஒரு வாரமாக புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. காட்டூர் பகுதியை சேர்ந்த, 820 விவசாயிகளில், 430 பேருக்கு இழப்பீடு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 390 பேருக்கு வழங்கப்படவில்லை.இதுகுறித்து வேளாண் துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று, மீஞ்சூர் - பழவேற்காடு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மீஞ்சூர் வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் டில்லிக்குமார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.தகவல் அறிந்து வந்த பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, இரண்டு நாட்களுக்குள் தீர்வு காண்பதாக உறுதியளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக, மீஞ்சூர் - பழவேற்காடு சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை