போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்:திருவள்ளூர், பள்ளிப்பட்டில் சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, உறுதிமொழி ஏற்று, பேரணியை துவக்கி வைத்தார்.பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, முக்கிய நகர வீதி வழியாக சென்று, தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், போதை பொருளுக்கு எதிராக, கல்லுாரி மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும், போதை பொருட்களுக்கு எதிராக 'ரங்கோலி' வரையப்பட்டிருந்தது.தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில், போதை பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நேற்று நடந்தன.