திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், அனுமதி மற்றும் பதிவு இல்லாமல் இயங்கும் கழிவுநீர் லாரிகள், நீர்நிலைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் கழிவுநீரை கொட்டி வருகின்றன. விதிமீறி செயல்படும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தும், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், கழிவுநீர் லாரிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் கழிவுநீர் லாரிகள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமையில், துாய்மை பாரத இயக்கத்தின் கீழ், ஊரக மற்றும் நகர்ப்புற அதிகாரிகள் மற்றும் கழிவுநீர் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவுறுத்தியதாவது: கழிவுநீர் லாரிகள், சம்பந்தப்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற அதிகாரிகளிடம் பதிவு செய்து, முறையான அனுமதி பெற வேண்டும். ஒரு கழிவுநீர் லாரிக்கு, நகர்ப்புற பகுதிகளில் 5,000 வீதமும், ஊரகப்பகுதிகளில் 3,000 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். பின், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். கழிவுநீர் அனுமதி மற்றும் புதிவு இல்லாமல் இயங்கும் வாகனங்களை ஆய்வு செய்து, போலீசார் மூலம் பறிமுதல் செய்ய, சம்பந்தப்பட்ட நகர்ப்புற, ஊரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவுநீரை கொட்ட வேண்டும். வேறு பகுதியில் கொட்டினால், வாகனங்களை பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, தினமும் அறிக்கை பெற்று, சம்பந்தப்பட்ட நகர்ப்புற, ஊரக துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். அப்போது, பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றும் வாகனங்களை கண்காணிக்க வேண்டுமென, நகர்ப்புற மற்றும் ஊரக அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். ஆனால், இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், புதிதாக மூன்று கலெக்டர்கள் பொறுப்பேற்றும், இன்று வரை அனைத்து பகுதிகளிலும் அனுமதியின்றி கழிவுநீர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் கழிவுநீர் வெளியேற்றுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே, மாவட்டம் முழுதும் இயங்கும் கழிவுநீர் லாரிகள் குறித்து முறையாக ஆய்வு செய்து, அவற்றை முறைப்படுத்துவது குறித்தும், விதிமீறலில் ஈடுபடும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும், மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்ரனர். இதுகுறித்து, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, “மாவட்டத்தில் இயங்கி வரும் கழவுநீர் லாரிகள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். மாவட்டம் முழுதும் ஆய்வு செய்து அனுமதி, பதிவு மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத கழிவுநீர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். கும்மிடி தொழிற்சாலைகளின் கழிவு நீர் டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றம் கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி, அவற்றின் திரவக் கழிவுகளை கையாள்வதில் அலட்சியம் காட்டி வருகின்றன. தொழிற்சாலைகளில் சேகரமாகும் திரவக்கழிவுகளை, அந்தந்த தொழிற்சாலை வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து, தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ள பசுமை திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். அதை மீறி, திறந்தவெளியில் திரவக்கழிவுகளை வெளியேற்றவோ, கழிவுநீர் வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தவோ கூடாது என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதன் மூலம் ஏற்படும் செலவுகளை தவிர்க்கும் நோக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை, பல தொழிற்சாலைகள் பின்பற்றுவது இல்லை. அதை, சுற்றுச்சூழல் துறையினரும் கண்காணிப்பதும் இல்லை. அதனால், தொழிற்சாலைகளின் திரவக்கழிவுகள், சுத்திகரிக்கப்படாமல், கழிவுநீர் வாகனங்கள் வாயிலாக வெளியேற்றப்பட்டு, நீர்நிலைகள், மழைநீர் கால்வாய்கள், திறந்தவெளிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாசு கட்டப்பாட்டு விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது, சுற்றுச்சூழல் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.