உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாய் கரையை உடைத்து அட்டூழியம் செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் கழிவுநீர் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

கால்வாய் கரையை உடைத்து அட்டூழியம் செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் கழிவுநீர் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

தண்டலம்:செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் கரையை உடைத்து, கழிவுநீரை வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி ஆழமும் கொண்டது. இங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு 53 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரித்து, சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கனமழை இந்த ஏரியின் முக்கிய நீர்வரத்து கால்வாயாக கிருஷ்ணா கால்வாய் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்துவ கல்லுாரியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக கிருஷ்ணா கால்வாயில் விடப்படுவதால், கழிவு நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று மாசு ஏற்படுத்தியது. இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் வெளியான செய்தியை அடுத்து, சவீதா மருத்துவ கல்லுரியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கிருஷ்ணா கால்வாயில் கலப்பதை தடுக்கும் வகையில், நீர்வளத்துறையினர் கரை அமைத்தனர். இதனால், கல்லுாரி வளாகம் மற்றும் அதன் வெளியே உள்ள காலி நிலத்தில், கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை சுற்றுப்புறத்தில் கன மழை பெய்தது. அப்போது, வடமாநில இளைஞர்கள் நான்கு பேர், மண்வெட்டி மூலம் கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீர் கலக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட கரையை வெட்டி அகற்றி, உடைப்பு ஏற்படுத்தினர். இந்த உடைப்பு வழியே, சவீதா கல்லுாரி வளாகத்தில் தேங்கிய கழிவு நீர், மழை நீருடன் சேர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றும், கரை உடைக்கப்பட்ட இடத்தை நேற்று வரை சரிசெய்யவில்லை. கரையை உடைத்து சேதம் ஏற்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றச்சாட்டு இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், செம்பரம்பாக்கம் ஏரி மாசடைகிறது என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குற்றம்சாட்டினார். மேலும், கழிவு நீர் கலப்பது குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து கால்வாயை உடைத்து கழிவு நீரை வெளி யேற்றியுள்ளனர். இதை நீர்வளத்துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவும் இல்லை. உடைத்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து, மாசு ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை