உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் மண் குவாரியை கண்காணிப்பதில் அதிகாரிகள்...உறக்கம்!: கனிமவளம் கொள்ளையால் நிலத்தடி நீர் கேள்விக்குறி

ஏரியில் மண் குவாரியை கண்காணிப்பதில் அதிகாரிகள்...உறக்கம்!: கனிமவளம் கொள்ளையால் நிலத்தடி நீர் கேள்விக்குறி

பொன்னேரி:சென்னை எல்லை சாலை திட்டப் பணிகளுக்காக, தடப்பெரும்பாக்கம் பாசன ஏரியில் இருந்து தினமும், 1,000க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் மற்றும் சவுடு மண் அள்ளப்படுவதை, அதிகாரிகள் கண்காணிக்காமல் இருப்பதாகவும், இதனால் ஏரியில் கனிமவளம் குறைந்து, நிலத்தடி நீர் பாதிக்கும் எனவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் துவங்கி, மாமல்லபுரம் வரை, 132 கி.மீ., தொலைவிற்கு, சென்னை எல்லை சாலை திட்டம் என்ற புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் ஐந்து நிலைகளாக மேற்கொள்ளப்படுகிறது. முதல் நிலையானது காட்டுப்பள்ளியில் துவங்கி, தச்சூர் வரை, 25 கி.மீ., தொலைவிற்கு அமைகிறது. இதற்காக, ஆங்காங்கே உள்ள பாசன ஏரிகளில் இருந்து மண் அள்ளப்பட்டு, சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில், 160 ஏக்கர் பரப்பில் பாசன ஏரியிலும், மூன்று ஆண்டுகளாக குவாரி விடப்பட்டு மண் அள்ளப்படுகிறது.இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீர், சுற்றியுள்ள தடப்பெரும்பாக்கம், வடக்குப்பட்டு, கொடூர் ஆகிய கிராமங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. ஏரியில் மழைநீர் தேங்குவதால், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.குடிநீர் தேவைகளுக்கு ஏரியின் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு வாரமாக ஏரியில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளப்பட்டு வருகிறது.சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் மட்டுமின்றி, தனியார் கட்டுமான பணிகளுக்கும், காலி மனைகளிலும் கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகளவு ஆழத்தில் மண் அள்ளப்படுகிறது.லாரிகள், 15 அடி ஆழத்தில் சென்று, மண் எடுத்து வருகின்றன. களிமண் மட்டுமின்றி சவுடு மண் மற்றும் மணல் உள்ளிட்டவைகளும் அள்ளப்பட்டு ஏரி கபளீகரம் செய்யப்படுகிறது.அதிக ஆழத்தில் மணலுடன் சேர்த்து மண் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக ஏரியில் குவாரி என்ற பெயரில் கனிமவளம் கொள்ளைபோவதாகவும், இதை கண்காணிக்க வேண்டிய வருவாய், நீர்வளம், கனிமளம் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உறக்கத்தில் இருப்பதாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:அதிகாலை முதல் இரவு வரை, தொடர்ந்து ஏரியில் மண் அள்ளப்படுகிறது. தினமும் 900 - 1,000 லோடு வெளியேறுகிறது. ஒரு லோடுக்கு, 5,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் தினமும், 50 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.ஏரி முழுதும் பரவலாக, 3 அடி ஆழத்திற்கு களிமண்ணை மட்டும் அள்ளினால், மழைநீரை சேமித்து, நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். ஆனால், தற்போது குவாரி என்ற பெயரில், 15 அடி ஆழம் வரை மண், சவுடு, மணல் என, அனைத்தையும் கபளீகரம் செய்கின்றனர்.தனிநபர்கள் சிலரின் சுயலாபத்திற்காக, கனிமளம் கொள்ளை போகிறது. இதனால் எதிர்காலத்தில் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் நிச்சயம் பாதிக்கும் அபாயம் உள்ளது.எனவே, எதிர்கால தேவையை கருதி, நிலத்தடி நீரை பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக ஏரியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி