அரசு மருத்துவமனை முன் ஆட்டோக்களால் நெரிசல் எச்சரிக்கையை மீறி அடாவடி
திருவள்ளூர், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஜே.என்.சாலையில் செயல்பட்டு வருகிறது. ஆறு அடுக்கு நவீன கட்டடத்தில் இயங்கி வரும் இம்மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை, எலும்பு முறிவு, கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தினமும், 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், உள்நோயாளிகளாக 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக உறவினர்களும் வந்து செல்கின்றனர்.சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையோரம் மருத்துவமனை அமைந்திருப்பதால், வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. அரசு மருத்துவமனை நுழைவாயில் முன், மருத்துவமனையில் இருந்து பேருந்து மற்றும் ரயில் நிலையம் செல்வோரை அழைத்து செல்ல சாலை நடுவில் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். இதனால், ஜே.என்.சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனை அருகில் ஆட்டோக்கள் நிறுத்தக் கூடாது என, காவல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது.அதையும் மீறி, தொடர்ந்து ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், அரசு மருத்துவனை முன் தினமும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும் அவதிப்படுகின்றனர்.எனவே, அரசு மருத்துவமனை முன், தினமும் போலீசாரை பணியில் நியமிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.