சிறந்த ஊராட்சி ஒன்றியம் கும்மிடிப்பூண்டிக்கு விருது
திருவள்ளூர்:சிறந்த ஊராட்சி ஒன்றியமாக கும்மிடிப்பூண்டி தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, கலைஞரின் கனவு இல்ல திட்டம், ஊரக பகுதிகளில் புனரமைக்கப்படும் வீடு எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மேலும், முதல்வரின் கிராம சாலை பணி, கலைஞரின் கனவு இல்லம், பழங்குடியினர் வீடு கட்டுவதற்கான பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டாக்களை விரைவில் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய உதவி பொறியாளர்களுக்கான விருது திருத்தணி ஒன்றியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் - வில்லிவாக்கம், மீஞ்சூர் மற்றும் சிறந்த பணி மேற்பார்வையாளர் - கும்மிடிபூண்டி, கடம்பத்துார் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும், சிறந்த ஊராட்சி ஒன்றியத்திற்கான விருது, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டது. இதில், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜவேல், உதவி இயக்குநர் - ஊராட்சி, யுவராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.