சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி
திருத்தணி: சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்க, நகராட்சி நிர்வாகம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் வாரச்சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம், கோவில் வளாகம் மற்றும் சாலையோரம் வியாபாரிகள் சிறிய அளவில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், சாலையோர வியாபாரிகள் குறித்து கணக்கெடுத்தனர். இதில், 1,200 பேர் கண்டறியப்பட்டு, அவர்களது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் பெற்று, இலவசமாக பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அடையாள அட்டை உள்ள வியாபாரிகளுக்கு, வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தருவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி கூறியதாவது: அடையாள அட்டை உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்படும். முதல் தவணையாக 10,000 ரூபாயும், இரண்டாம் தவணையாக 20,000 ரூபாயும், மூன்றாம் தவணையாக 50,000 ரூபாய் வரையிலும் கடனுதவி வழங்கப்படும். தவணை தொகை குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், அடுத்தடுத்த தவணைகளில் கடனுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.