ஆந்திராவில் பாலம் உடைப்பு மாற்று வழியில் வாகனங்கள் இயக்கம்
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம், வரதப்பாளையத்தில் இருந்து, காளஹஸ்தி செல்லும் சாலையில், கோவர்தனபுரம் பகுதியில், மாரேடி கால்வாய் மீது பாலம் ஒன்று உள்ளது. தொடர் மழையால் சில தினங்களுக்கு முன் பாலத்தில் லேசான உடைப்பு ஏற்பட்டது. நேற்று, அப்பகுதியில் மிக கனமழை பெய்ததால், மாரேடி கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, பாலத்தின் பெரும் பகுதி உடைந்தது.அதனால், வாகன போக்குவரத்தை தடை செய்யும் விதமாக, சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அனைத்து வாகனங்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். சென்னை, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டி, தடா மார்க்கமாக காளஹஸ்தி மற்றும் திருப்பதி வரை இயக்கப்படும் ஆந்திரா மற்றும் தமிழக அரசு பேருந்துகள், மேற்கண்ட வரதப்பாயையம் வழியாக சென்று வர வேண்டும்.பாலம் மூடப்பட்டதால், அனைத்து பேருந்துகளும், சூளூர்பேட்டை, பி.என்.கண்டிகை வழியாக மாற்று திசையில் இயக்கப்பட்டன. இதனால், ஏற்பட்ட, இரண்டு மணி நேர கால தாமதத்தால், பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.