சித்தப்பாவை தாக்கிய அண்ணன் மகனுக்கு காப்பு
ஆர்.கே.பேட்டை:உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்றவரை, அவரது அண்ணன் மகன் தாக்கியதில் மண்டை உடைந்தது. தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45. இவர், சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது சித்தி, கடந்த வாரம் இறந்து விட்டார். இந்நிகழ்வின் போது இவருக்கும், இவரது அண்ணன் மகன் விஜய், 29, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உறவினர்கள் சமரசம் செய்தனர். வெங்கடேசன் சித்தியின் காரியம் இன்று நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை குடும்பத்தினரும், உறவினர்களும் சேர்ந்து நேற்று மேற்கொண்டிருந்தனர். அப்போது வெங்கடேசனை, விஜய் பூஜையின் போது பயன்படுத்தும் மணியால் தாக்கினார். இதில், வெங்கடேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆர்.கே.பேட்டை போலீசார் விஜயை கைது செய்து விசாரிக்கின்றனர்.