உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிருஷ்ணன் கோவில் அகற்றம் சகோதரர்கள் தீக்குளிக்க முயன்றதால் கைது

பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிருஷ்ணன் கோவில் அகற்றம் சகோதரர்கள் தீக்குளிக்க முயன்றதால் கைது

திருவள்ளூர், 'திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் கிராமத்தில், பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ருக்மணி சத்யபாமா சமேத சந்தன கோபால கிருஷ்ண கோவிலை அகற்ற வேண்டும்' எனக்கோரி, அதேப் பகுதியைச் சேர்ந்த வனிதா ஸ்ரீதர், 40, என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2023ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வழக்கு தொடுத்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற, 2023ம் ஆண்டு, டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்த உயர் நீதிமன்றம், கோவிலை அகற்றும்படி, கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது.இதையடுத்து, 2024ம் ஆண்டு, நவம்பர் மாதம் 14ம் தேதி, திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், டி.எஸ்.பி., தமிழரசி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், கோவிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதிவாசியினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் வாசுதேவன், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவில் அகற்றும் பணி பின்னர் நடைபெறும் என, தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கிருஷ்ணர் கோவிலை இடித்து அகற்றும்படி மீண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், தாசில்தார் ரஜினிகாந்த், புல்லரம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் டில்லிபாபு மற்றும் வருவாய் துறையினர், தாலுகா போலீசார், நேற்றுமுன்தினம் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி, விநாயகர் சிலைகளை அகற்றி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.பின், நேற்று காலை, திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த், டி.எஸ்.பி., தமிழரசி, அசோகன், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் வருவாய் துறையினர், 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், மூன்று பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக, கிருஷ்ணன் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர்.கோவில் இடிப்பால் ஆத்தரம் அடைந்த, அக்கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான பாஸ்கர், 45, ரவிகுமார், 43, ஆகிய இருவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை