புதர் மண்டி பாழாகிறது புதுகுடியானுார் சந்தை வளாகம்
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம், கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்டது புதுகுடியானுார் கிராமம். இந்த கிராமத்தில், கடந்த 2021ல், வாரசந்தை வளாகம் கட்டப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட இந்த வளாகம், நீண்டகாலமாக திறக்கப்படாமல் இருந்தது.கழிப்பறை, குடிநீர் வசதியுடன் 32 கடைகளுடன் கட்டப்பட்ட இந்த வளாகம், ஆறு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பராமரிக்காததால் தற்போது புதர் மண்டி சீரழிந்து வருகிறது. வளாகத்தில் செடிகள் முளைத்து வருகின்றன. சந்தை வளாகத்தை முறையாக பராமரித்தால், வியாபாரிகள் மற்றும் பகுதிவாசிகள் பயனடைவார்கள். இந்த வளாகம் பாழடைந்து வருவதால், கொடைக்கல் கூட்டு சாலையில் நெரிசலான பகுதியில் வியாபாரிகள் கடை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். சந்தை வளாகத்தை சீரமைத்து வியாபாரிகளுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.