உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு
திருவள்ளூர்:''திருவள்ளூர் மாவட்டத்தில், 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க, வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்,'' என, கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் துறையின் மூலம், 10 இடங்களில் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில், 10 - 20 லட்சம் ரூபாய் வரையிலான உழவர் நல சேவை மையங்கள் அமைக்க, 30 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்கு, 28 - 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த தொழில்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, வேளாண் அறிவியல் நிலையங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். முதல்வரின் 'உழவர் நல சேவை மையங்கள்' மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற உதவுவது மட்டுமல்லாமல், வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம். இத்திட்டத்தில் மானிய உதவி பெற, https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.