உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதல்வர் கோப்பை 1,500 மீ., ஓட்டம்; தங்கம் வென்ற சென்னை மாணவி

முதல்வர் கோப்பை 1,500 மீ., ஓட்டம்; தங்கம் வென்ற சென்னை மாணவி

சென்னை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்து வரும் மாவட்டங்களுக்கு இடையிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், சென்னை மாவட்டம் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.தமிழக முதல்வர் கோப்பை, 2024ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள், கடந்த 10ம் தேதி துவங்கின. தடகளம், நீச்சல், ஹாக்கி, வாலிபால் உட்பட, 36 விளையாட்டுகளில் தமிழகம் முழுதும் மண்டல வாரியாக 11 லட்சத்து 56 ஆயிரத்து 566 வீரர்கள் பங்கேற்றனர்.இதில், மாநில அளவிலான இறுதிச்சுற்றுக்கு 33,000 வீரர்கள் தேர்வாகினர். கடந்த 4ம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில், இறுதிச்சுற்று போட்டிகள் துவங்கின. ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் வரை, சென்னை மாவட்ட அணி பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்த பள்ளி மாணவர்களுக்கான மல்யுத்த போட்டியில், 66 கிலோ எடை பிரிவில், திருவண்ணாமலை மாவட்டத்தின் பிரதீப் தங்கம் வென்றார். சென்னை வீரர்கள் வித்யுத், ஆனந்தன், முகமது ஆசிப் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.சென்னை, நேரு மைதானத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான 3,000 மீ., ஓட்டப்பந்தயத்தில், சேலம் மாவட்டம் சரவணன் தங்கம் வென்றார். கோவையைச் சேர்ந்த ஆகாஷ் வெள்ளியும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் வெண்கலமும் வென்றனர்.கல்லுாரி மாணவியருக்கான 1,500 மீ., ஓட்டப்பந்தயத்தில், சென்னை வீராங்கனை லாவண்யா தங்கம் வென்றார். மதுரை சவுந்தர்யா வெள்ளியும், திருச்சி சுவாதி வெண்கலமும் வென்றனர்.நேற்று முன்தினம் வரை நடந்து முடிந்த போட்டிகளில், சென்னை மாவட்ட அணி 25 தங்கம், 17 வெள்ளி, 21 வெண்கலம் என, மொத்தம் 63 பதக்கங்களை வென்று, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சேலம் மாவட்ட அணி 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, மொத்தம் 19 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், 8 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 20 பதக்கங்களுடன் ஈரோடு மாவட்ட அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்கள் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் கடைசி இடத்தில் உள்ளன. போட்டிகள் 24ம் தேதி முடிவடைகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை