உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சலுகை குறைப்பால் அவதியுறும் மாற்றுத்திறன் குழந்தைகள்...அரசு கவனிக்குமா?: 1-- - 5 வயது சிறப்பு குழந்தைகளை பராமரிக்க வேண்டுகோள்

சலுகை குறைப்பால் அவதியுறும் மாற்றுத்திறன் குழந்தைகள்...அரசு கவனிக்குமா?: 1-- - 5 வயது சிறப்பு குழந்தைகளை பராமரிக்க வேண்டுகோள்

திருவாலங்காடு:மாற்றுத்திறனாளி மாணவர்கள் பராமரிக்கப்படும் பகல்நேர பாதுகாப்பு மையங்களுக்கு, சலுகைகள் குறைப்பால் அவதியடைந்து வருகின்றனர். ஒன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளை பராமரிக்க மையம் ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்தூர் உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லும் வயதிலுள்ள மாற்றுத்திறன் மாணவர்களை பராமரிப்பதற்கும், அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், பகல்நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இங்கு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து சிறப்பு ஆசிரியர்கள், பிசியோதெரபிஸ்ட், சிறப்பு பயிற்றுனர், பகல்நேர பாதுகாவலர் மற்றும் உதவியாளர் பணியில் உள்ளனர்.தற்போது, மாவட்டம் முழுதும் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட மையங்களுக்கு வந்து பயின்று செல்வோர், 340 மாணவர்கள் வரை உள்ளனர். அதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் பயில்வோர், மற்றும் 80 சதவீதம் மாற்றுத்திறனுடன் வீட்டில் உள்ள குழந்தைகள் என, 3,000 பேர் வரை உள்ளனர்.தற்போது, இந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் தரப்படும் வழக்கமான சத்துணவு மற்றும் பயிற்சி அளிப்பதற்கான தளவாட பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில கல்வியாண்டுகளுக்கு முன், இந்த மையங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.மாற்றுத்திறன் மாணவர்களை அழைத்து வருவதற்கான வாகனம், அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி வழங்குவது, பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.ஒன்றன்பின் ஒன்றாக குறைந்து, தற்போது சிறப்பு திட்டங்கள் என, எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை. பிசியோதெரபி மட்டும் அளிக்கப்படுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் சுண்டல், பருப்பு வகைகள் போன்ற சிற்றுண்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.பெற்றோரே மாணவர்களை அழைத்து வர வேண்டி இருப்பதால், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதற்கான வாகன வசதிகளும் தற்போது இல்லை. இதனால், மாணவர்களின் எண்ணிக்கையும் மையங்களில் கணிசமாக குறைந்து வருகிறது. மேலும், மையங்களிலிருந்து பள்ளி வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இதுகுறித்து ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் சிவரஞ்சனி கூறியதாவது:தமிழக அரசு அங்கன்வாடி மையத்தில் ஒன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளை பராமரிப்பதை போன்று, மாற்றுத்திறன் மற்றும் ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளை பராமரிக்க, ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று முக்கிய கிராமங்களில் தனி மையம் ஏற்படுத்த வேண்டும்.சிறப்பு குழந்தைகளுக்கான மையம் இல்லாததால், அன்றாடம் கூலி வேலைக்கு சென்று உணவு சாப்பிடும் ஏழை பெற்றோர், வேலைக்கும் செல்ல முடியாமல், குழந்தைகளை பராமரிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.இதனால், பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. அரசு தனி கவனம் செலுத்தி, தனி மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசு கவனிக்குமா?

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறன், ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி, திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பலரும் வாகனங்களில் அழைத்துவர வசதியில்லாமல், குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் சிரமங்களை அனுபவிக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் மையத்திற்கு வந்து பயிலும் போது குணமடைய வாய்ப்புகள் அதிகம். எனவே, தமிழக அரசு அக்கறை செலுத்தினால், சிறப்பு குழந்தைகள் சிறப்பாக செயல்படுவர்.- சிறப்பு ஆசிரியர்,பகல்நேர பாதுகாப்பு மையம்,திருவள்ளூர்.

சிறப்பு திட்டங்கள் வேண்டும்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதில், அரசு அலட்சியமாக உள்ளது. ஆண்டுதோறும் சிறப்பு போட்டிகளும், நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தினால், அந்த மாணவர்கள் எவ்வாறு மேம்பட முடியும். மையங்களை புதுப்பித்து, அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். என்றனர்.- வி.மனோகரன்,கல்வியாளர்,திருவாலங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை