வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை புழல் ஒன்றியத்தில் கலெக்டர் உறுதி
செங்குன்றம்:விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடியாததால் விஷ ஜந்துக்கள் படையெடுத்து, பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாட்களாக தேங்கியுள்ள வெள்ளநீர், இன்னும் வடியாமல் உள்ளது.வெள்ளம் தேங்கியுள்ள குடியிருப்புகளில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் படையெடுப்பதால், பகுதிவாசிகள் துாக்கமிழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.விளாங்காடுபாக்கம் மல்லிமா நகர், கோமதி அம்மன் நகர், ஸ்டார் சிட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், வெள்ளம் இன்னும் வடியாமல் அப்படியே உள்ளது. குடியிருப்புவாசிகள் முழங்கால் அளவு தண்ணீரை கடந்து, வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. வாகனங்களை நகருக்குள்ளேயே எடுத்துச் செல்ல முடியாத நிலையில், அவரவர் 'பைக்'குகளை நகரின் நுழைவாயிலேயே நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில் விளாங்காடுபாக்கம் சுற்றுவட்டாரத்தில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது குறித்தும், வெள்ளம் பாதித்த பகுதிகளையும், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டார். புழல் ஒன்றியம் தீர்த்தகரையம்பட்டு, புள்ளிலைன், அழிஞ்சிவாக்கம், விளாங்காட்டுபாக்கம் ஊராட்சிகளை பார்வையிட்ட கலெக்டர், 'குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, மக்களிடம், வாய்மொழி உத்தரவு அளித்த கலெக்டர், 'மழைநீர் கால்வாய்களை துார்வாரி, மழைநீரை சென்றம்பாக்கம் ஊராட்சி ஏரியில் சேமிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார்.இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை கூட இன்னும் எடுக்கப்படாததால், அங்கு நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.