பழவேற்காடு முகத்துவாரத்தில் துார்வாரும் பணி துரிதமாக மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்
பழவேற்காடு:பழவேற்காடு ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரம் பகுதியில், 26.85 கோடி ரூபாயில் அலை தடுப்பு சுவர் அமைப்பது மற்றும் துார்வாரும் பணி நடக்கிறது.'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கலெக்டர் பிரதாப் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சோழவரம், மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டார்.பழவேற்காடு முகத்துவாரத்தில் மணல் திட்டுக்கள் குவிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழலில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.அங்கு பாறைகற்களை கொண்டு போடப்பட்டுள்ள அலைதடுப்பு சுவர்களையும், டிரஜ்ஜர் இயந்திரம் உதவியுடன் முகத்துவாரத்தில் குவிந்துள்ள மணல் திட்டுகளை வெளியே அகற்றப்படுவதையும் பார்வையிட்டு, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் மணல் திட்டுக்களை அகற்றி, நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது, திருவள்ளூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த், பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.