பேரம்பாக்கம் ஏரியில் விதிமீறி மணல் அள்ளுவதாக புகார் மனு
திருவள்ளூர் பேரம்பாக்கம் ஏரியில் விதி மீறி மணல் அள்ளுவதாக, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேரம்பாக்கம் பகுதி மக்கள் சார்பாக, சமூக ஆர்வலர் வசந்தகுமார் என்பவர், நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்பிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேரம்பாக்கம் பொதுப் பணி துறைக்குச் சொந்தமான ஏரியில், சவுடு மண் குவாரி, கடந்த மாதம் 7ம் தேதி முதல் இயங்கி வருகிறது. அனுமதி வாங்கிய இடம் மற்றும் அதற்கு அருகில் உள்ள அனுமதி பெறாத இடங்களிலும், அதிகளவில் மண் மற்றும் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அனுமதித்த 3 அடி ஆழத்தை மீறி, சட்ட விரோதமாக, 15 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு, அங்கு கிடைக்கும் மணலை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படும். எனவே மண் குவாரியில், ஆய்வு செய்து, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. -----------------