அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்., எம்.பி., பேரணி
திருவள்ளூர்:அம்பேத்கர் குறித்து விமர்சித்த உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்., - எம்.பி., தலைமையில் தொண்டர்கள் திருவள்ளூரில் பேரணி நடத்தினர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து விமர்சித்ததை கண்டித்து, திருவள்ளூர் லோக்சபா தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் தலைமையில் தொண்டர்கள் கண்டன பேரணி நடத்தினர்.திருவள்ளூர் பேருந்து நிலையம், பஜார் வீதி வழியாக, கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடந்தது. கொட்டும் மழையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். இதனால், திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பின், கலெக்டர் அலுவலகத்தில், எம்.பி., சசிகாந்த் செந்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளித்தார்.அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அம்பேத்கர் குறித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து, பொதுமக்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அவரது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஜனாதிபதிக்கு, கலெக்டர் வாயிலாக மனு அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.