திருத்தணி காமராஜர் மார்க்கெட் திறப்பதில் தொடரும் தாமதம்
திருத்தணி:திருத்தணி ம.பொ.சி.சாலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த காமாஜர் காய்கறி மார்க்கெட் பழுதடைந்தால், கடந்தாண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில், பழைய காய்கறி மார்க்கெட் இடித்து அகற்றப்பட்டது.அதே இடத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.02 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நவீன கட்டடம் கட்டும் பணிகள், கடந்த மாதம் நிறைவு பெற்றது.தற்போது, புதிய காய்கறி மார்க்கெட்டில் 92 கடைகள், கழிப்பறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், காய்கறி மார்க்கெட் திறக்காமல் பூட்டியே கிடக்கிறது.இதுகுறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி கூறியதாவது:புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு உரிய அரசாணை பெற்று, 'கலைஞர் நுாற்றாண்டு காய்கறி அங்காடி' என பெயர் சூட்டப்பட்டது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக, அரசு அனுமதியுடன் மீண்டும் காமராஜர் காய்கறி மார்க்கெட் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இதற்கான அரசாணை இன்னும் வராததால், புதிய காய்கறி மார்க்கெட் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. அரசு அனுமதி கிடைத்தவுடன் காய்கறி மார்க்கெட் திறப்பு தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.