நெடுஞ்சாலையில் மாடுகள் உலா வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்
திருவள்ளூர்:திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள டோல்கேட்டில் இருந்து, ஊத்துக்கோட்டை சாலை பிரிகிறது. ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி மற்றும் திருவள்ளூரில் இருந்து, பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம், சத்தியவேடு, நாகலாபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன.இந்த நிலையில், ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உலா வருகின்றன. அவ்வப்போது சாலை நடுவில் நிற்பதும், அங்கேயே ஓய்வெடுத்தும் வருகின்றன.இதன் காரணமாக, இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. வேகமாக வரும் வாகனங்கள் சில சமயம் கால்நடைகள் மீது மோதி விபத்திற்குள்ளாகி வருகின்றன.சாலைகளில் கால்நடைகள் திரிய விடக்கூடாது என கலெக்டர் எச்சரித்தும் அவற்றின் உரிமையாளர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை உள்ளாட்சி மற்றும் வருவாய் துறையினர் இணைந்து பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.