அக்கரம்பேடில் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தில் இருந்து அக்கரம்பேடு செல்லும் சாலையில், மழைநீர் கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்து உள்ளது. பாலத்தின் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்துஉள்ளன.பாலத்தின் துாண்கள் சேதமானதால், ஆங்காங்கே கான்கிரீட் தளம் உள்வாங்கி, அவற்றில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த பள்ளத்தில், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.கனரக வாகனங்கள் பயணிக்கும்போது, இடிந்து விழும் நிலையில் பாலம் பலவீனமாக உள்ளது. இந்த பாலத்தின் வழியாக அக்கரம்பேடு, வெள்ளம்பாக்கம், மேட்டுக்காலனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர்.எனவே, பாலம் முழுதும் சேதமடைந்து போக்குவரத்து ஸ்தம்பிக்கும் முன், அதை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.