உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலம் அளப்பதில் தாமதம் கட்டடம் கட்டுவதில் சிக்கல் வருவாய் துறை அலட்சியம்

நிலம் அளப்பதில் தாமதம் கட்டடம் கட்டுவதில் சிக்கல் வருவாய் துறை அலட்சியம்

திருத்தணி: திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு வருவாய் துறையினர் நிலத்தை அளந்து கொடுப்பதில் காலதாமதம் செய்து வருவதால், கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் இல்லாததால், தற்போது அரசு பள்ளி ஆய்வகத்தில் இயங்கி வருகிறது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் அருகே இயங்கி வந்த திருத்தணி வட்டார கல்வி அலுவலக கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. கடந்த 2022 அக்டோபரில் இருந்து, திருத்தணி ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆய்வக கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், 98 அரசு பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள் உட்பட, பல்வேறு பொருட்களை வைப்பதற்கு இடமில்லை. மேலும், இந்த ஆய்வகத்தில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருவதால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் செய்முறை தேர்வு மற்றும் பயிற்சி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வட்டார கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: சேதமடைந்த வட்டார கல்வி அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கேயே புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வருவாய் துறையினர் அந்த இடத்தை அளந்து, பள்ளிக்கல்வி துறையின் மீது பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என, பல மாதங்களாக பரிந்துரை கடிதம் எழுதி வருகிறோம். ஆனால், வருவாய் துறையினர் அலட்சியத்தால், புதிய கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி