உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நன்னீருடன் உவர் நீர் கலப்பதால் விவசாயிகள்...விரக்தி! தடுப்புச்சுவர் அமைப்பதில் நீர்வளத்துறை பாராமுகம்

நன்னீருடன் உவர் நீர் கலப்பதால் விவசாயிகள்...விரக்தி! தடுப்புச்சுவர் அமைப்பதில் நீர்வளத்துறை பாராமுகம்

பொன்னேரி தமிழகத்தின் கடைகோடி கிராமங்களில், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நன்னீருடன், பழவேற்காடு ஏரியின் உவர் நீர் கலந்து, 700 ஏக்கர் பரப்பில் விவசாயம் பாதிக்கிறது. தடுப்புச்சுவர் அமைப்பதில் நீர்வளத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளூர், புதுகுப்பம், சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு ஆகிய கிராமங்கள், பழவேற்காடு உவர் நீர் ஏரியையொட்டி அமைந்துள்ளன. இவை, தமிழகத்தின் கடைகோடி கிராமங்களாக உள்ளன.

நன்னீருடன் கலப்பு

இந்த கிராமங்களில் உள்ளவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு, நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், வடகிழக்கு பருவமழையை நம்பி, ஆண்டுக்கு ஒரு முறை சம்பா பருவத்தில் நெல் பயிரிடுகின்றனர்.பொன்னேரி அடுத்த பனப்பாக்கம், பெரியகரும்பூர், தேவம்பட்டு, மெதிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கால்வாயில் செல்லும் தண்ணீர், கள்ளூர், புதுகுப்பம் கிராமங்களில் உள்ள பழவேற்காடு உவர் நீர் ஏரியில் வந்து கலக்கிறது.இந்த கால்வாயின் இருபுறமும் கள்ளூர், புதுகுப்பம் உள்ளிட்ட கிராமங்களின், 700 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கால்வாயில் தேங்கும் மழைநீரே, மேற்கண்ட கிராமங்களின் விவசாயத்திற்கான முக்கிய நீராதாரம்.இந்நிலையில், மழைக்காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆரணி ஆறு மற்றும் பல்வேறு நீர்நிலைகளின் உபரிநீர், பழவேற்காடு ஏரிக்கு வரும்பேது, அதன் நீர்மட்டம் அதிகரிக்கிறது.அச்சமயங்களில், பழவேற்காடு ஏரியின் உவர் நீரானது கள்ளூர், புதுகுப்பம் கிராம விவசாயிகள் பயன்படுத்தும் கால்வாயில் தேங்கியுள்ள நன்னீருடன் கலக்கிறது.நன்னீருடன் உவர் நீர் கலந்துவிடுவதால், அதை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. நெற்பயிர்களுக்கு பாசன வசதி கிடைக்காமல் வளர்ச்சி பாதிக்கிறது. கால்வாயில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், அதை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் கள்ளூர், புதுகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில், இதே நிலை தொடர்வதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து விரக்தி அடைகின்றனர்.

அலட்சியம்

இந்த பாசன கால்வாயும், பழவேற்காடு உவர்நீர் ஏரி இணையும் பகுதியில், வெள்ள தடுப்புச்சுவர் அமைத்து, நெற்பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும்தமிழக பட்ஜெட்டின் போது, தடுப்புச்சுவர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என, விவசாயிகள் காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர்.தமிழகத்தின் கடைகோடி கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண்பதில், நீர்வளத் துறையினர் அலட்சியமாக இருப்பதாக, விவசாயிகள வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.விவசாயம் பாதிப்புஒவ்வொரு ஆண்டும் மழையின்போது, ஏரியின் உவர் நீர், நன்னீருடன் கலப்பதை தடுக்க முடியாமல் தவிக்கிறோம். நிலத்தடி நீரும் இல்லாமல், நீர்நிலைகளில் தேங்கும் மழைநீரிலும் உவர் நீர் கலந்துவிடுவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்தாண்டு, தென்மாவட்டங்களில் மூன்று இடங்களில், 94 கோடி ரூபாயில், உவர் நீர் புகுவதை தடுக்க, தடுப்பு அரண்கள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. அதேபோல், உவர் நீர் நன்னீரும் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்து, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.- சி.ரமேஷ்,விவசாயி, கள்ளூர், பொன்னேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி