ஆட்டோ கட்டணம் தாறுமாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பேருந்து நிலையம், ரயில்வே நிலையத்தில் இருந்து, கோவிலுக்கு செல்ல ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர்.ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்தப்படாததால் பக்தர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆட்டோ டிரைவர்களும் சிரமம் அடைகின்றனர்.பெரும்பாலானோர் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து, 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்கின்றனர். அதேபோல, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பேருந்து வாயிலாக வருவோர், தேரடியில் இறங்கி ஆட்டோவில் செல்கின்றனர்.துாரத்தை பொறுத்து 20 - 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்கின்றனர். பக்தர்களுடன் பேரம் பேசி வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், பக்தர்கள் ஆட்டோக்களை தவிர்த்து நடந்து செல்கின்றனர்.எனவே, போக்குவரத்து துறை மற்றும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.