பெரியபாளையம்:சாலையை ஆக்கிரமித்து கடைகள், கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு, போக்குவரத்து நெரிசல், 'பார்க்கிங்' வசதி இல்லாதது உள்ளிட்டவற்றால், பெரியபாளையத்தில் பக்தர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என, பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அமைந்துள்ளது. இங்குள்ள பவானியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி மாத விழா பிரசித்தி பெற்றது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முந்தைய நாளே குடும்பத்துடன் கோவிலுக்கு வருவர். பொங்கல் வைத்து, அலகு குத்துதல், வேப்ப இலை ஆடை அணிந்து கோவிலை வலம் வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை தரிசனம் செய்வர். இந்தாண்டுக்கான ஆடி மாத விழா, கடந்த 17ம் துவங்கியது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், 50,000க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ய பெரியபாளையம் வருகின்றனர். வெளியூர்களில் இருந்து பெரியபாளையம் பேருந்து நிலையம் இறங்கியது முதல் போக்குவரத்து நெரிசல் துவங்குகிறது. குறுகிய பேருந்து நிலையத்தில், 10க்கும் குறைவான பேருந்துகளே நிறுத்த முடியும். இதனால், பேருந்தை சாலையில் நிறுத்தி பயணியரை இறக்கி விடுகின்றனர். இச்சாலையின் இருபுறமும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கிருந்து கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள், நெரிசலில் சிக்க வேண்டியுள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனங்கள் நிறுப்படுவதால், கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது.
Galleryதேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், தற்போது சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பி.டி.ஓ., அலுவலகம் செல்லும் முகப்பு பகுதிகளில், ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டு உள்ளது. தார்சாலை அமைக்கவில்லை. இதற்கு எதிர்புறம பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இருபுறமும் தார்ச்சாலை அமைத்தால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். என்ன செய்யலாம்? *பேருந்து நிலையத்தில் இருந்து, பி.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் வரை, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார்ச்சாலை அமைத்தால் போக்குவரத்து சீராகும் * கோவிலுக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதை, கோவில் அருகில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த வேண்டும் * நான்கு சக்கர வாகனங்களை, பி.டி.ஓ., அலுவலகம் தாண்டி, இலவச பேருந்து நிறுத்தும் இடங்களில் நிறுத்த வேண்டும். கலெக்டர் ஆய்வு செய்தால் மட்டுமே, இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொக்கி போட்டு மின் திருட்டு சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கடைகளில், 'கொக்கி' போட்டு மின்சாரம் திருடப்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என, உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.