பல்லாங்குழியான சாலை பக்தர்கள் கடும் அவதி
திருத்தணி, கே.ஜி.கண்டிகையில் கோவில்களுக்கு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை சாய்நகரில் ஷீரடி சாய்பாபா கோவிலும், அதனருகே உள்ள மலைப்பகுதியில், 35 அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் சித்தேஸ்வரர் சிவன் என, மூன்று கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அனுமான் ஜெயந்தி, சிவராத்திரி, காணும் பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, இரவு முழுதும் தங்கியிருந்து தரிசனம் செய்வர். இந்த மூன்று கோவில்களுக்கும், கே.ஜி.கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 3 கி.மீ., வாகனங்களில் சென்றுவர வேண்டும். ஏழு ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்ட தார்ச்சாலை முறையாக பராமரிக்காததால், தற்போது பல்லாங்குழியாக மறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த தார்ச்சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.