| ADDED : ஜன 23, 2024 05:34 AM
திருவள்ளூர்: திருத்தணி ஒன்றியம் அகூர் காலனியை சேர்ந்தவர் யமுனா, 21. இவர் திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பள்ளிப்பட்டு ஒன்றியம் கரிம்பேடு காலனியை சேர்ந்த கோபி மகன் தேவா, 23 என்பவரும் அதே அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.பின் தேவாவும், யமுனாவும், அகூர் காலனியில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் தேவா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து யமுனா, கணவன் தேவாவை பார்க்கச் சென்றபோது இங்கு வரக்கூடாது என மிரட்டியுள்ளனர்.இதையடுத்து யமுனா திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவனுடன் சேர்த்து வைக்குமாறும், அவரது பெற்றோர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று யமுனா தன் தாய் மற்றும் உறவினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில், கணவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என தர்ணா நடத்தினார். இதையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சமரசம் செய்து அனுப்பினர்.