தினமலர் செய்தி எதிரொலி ராமாபுரம் சாலையில் மின்விளக்குகள் அமைப்பு
திருவாலங்காடு::திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம், கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திருவாலங்காடு அல்லது கனகம்மாசத்திரம் செல்ல வேண்டி உள்ளது.அதேபோல, வேலைக்கு திருவள்ளூர், அரக்கோணம், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வசிக்கும் பெரும்பாலான பெண்கள், மாணவ -- மாணவியர் பள்ளி, கல்லுாரி, வேலைக்கு சென்று இரவு 7 -- 10 மணிக்குள்ளாக வீடு திரும்புகின்றனர்.அவர்கள், கனகம்மாசத்திரம் -- தக்கோலம் நெடுஞ்சாலையில் அத்திப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ரங்காபுரம் வழியாக, 2 கி.மீ., துாரத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்திற்கு சென்று வருகின்றனர்.அப்படி செல்லும் போது மின்கம்பத்தில் மின் விளக்கு பொருத்தப்படாமல் உள்ளதால், அந்த சாலை இருட்டாக காணப்படுகிறது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் அந்த வழியாக செல்லும் பெண்களை அச்சுறுத்தி வருவதாகவும் எனவே மின்கம்பத்தில் விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ரங்காபுரம் முதல், ராமாபுரம் வரையிலான சாலையில் உள்ள மின்கம்பத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் விளக்குகள் அமைக்கப்பட்டன.