2ம் வகுப்பு டிக்கெட் பெற்று முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணிப்போரால் இடையூறு
திருவள்ளூர்:சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் தினமும், 180க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒன்பது பெட்டிகள் கொண்ட ரயிலில், இரண்டு முதல் வகுப்பு, 12 பெட்டிகள் கொண்ட ரயிலில் மூன்று முதல் வகுப்பு மற்றும் பெண்கள் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி செல்வோர், அலுவலகம் செல்வோர் என, ரயில்களில் கூட்டம் அலைமோதும்.அந்த நேரங்களில், கூட்டத்தை தவிர்க்க விரும்பும் பலர், முதல் வகுப்பு பெட்டியை தேர்வு செய்கின்றனர். அதற்காக, இரண்டாம் வகுப்பு கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் செலுத்தி மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர்.இந்நிலையில், ஒரு சிலர், இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை பெற்றுக் கொண்டு, முதல் வகுப்பில் பயணிக்கின்றனர். இது முதல் வகுப்பு பயணியருக்கு இடையூறு ஏற்படுகிறது.முதல் வகுப்பு பயணியர் கூறுகையில் 'இரண்டாம் வகுப்பு டிக்கெட் பெற்றுக் கொண்டு, முதல் வகுப்பு பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் பயணிக்கின்றனர். இதனால், கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிப்போருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து, ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும், நடவடிக்கை எடுக்கவில்லை. ரயில்வே நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.