அலட்சியம் வேண்டாம்:நெடு ஞ்சாலையுடன் இணைய ஒருவழி தான் இருக்கு ; நெரிசலில் திணறப்போகுது குத்தம்பாக்கம் பஸ் நிலையம்
சென்னை:குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில், கட்டுமான வளாகத்தில், 12 தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை அடைய ஒரு சாலை மட்டுமே உள்ளதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பேருந்து நிலையம் திறந்தபின் அவதிப்படுவதைவிட, முன்கூட்டியே யோசித்து செயல்படுவது நல்லது. சென்னையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன. அந்த வகையில், கோயம்பேடு பேருந்து நிலைய நெரிசலை குறைக்க, ஆந்திரா செல்லும் பேருந்துகளுக்காக, மாதவரத்தில் ஒரு பேருந்து நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. 24.60 ஏக்கர் நிலத்தில், 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. நுழைவாயில் பிரச்னை ஏற்கனவே, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டபோது, பேருந்துகள் வந்து செல்வதற்கான வாயில்கள் அமைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஒரே வழியில் வந்து செல்வது போன்று திட்டமிடப்பட்டது. போக்குவரத்து போலீசார் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், வெளியூர் பேருந்துகள் வெளியேற வசதியாக, வளாகத்தின் பின்புறம் புதிய வாயில் ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற பிரச்னை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதால், குத்தம்பாக்கம் பேருந்து நிலைய வடிவமைப்பில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கவனமாக இருந்தனர். இதனால், ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள், வி.ஐ.பி.,க்களின் வாகனங்கள், ஆட்டோக்கள், தனியார் கார்கள் உள்ளே வந்து வெளியே செல்வதற்காக, 12 தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஒவ்வொரு வகை வாகனங்களும் எவ்வித குழப்பமும் இன்றி உள்ளே வந்து, வெளியில் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பேருந்து நிலைய வளாகத்தில் இப்படி தனித்தனி வாயில்களில் உள்ளே வரும், வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைய, ஒரு வழி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. அதாவது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல, ஒரு சாலை மட்டுமே உள்ளது. அதிகாரிகள் அதிருப்தி குத்தம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணியின் நிலவரம் குறித்து, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அரசு போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு விஷயத்தை சுட்டிக்காட்டினர். பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், சென்னை - பெங்களூரு சாலையில் வழக்கமான வாகனங்களும் இதில் சேரும்போது, இப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். மாற்று சாலை இதையடுத்து, தேசிய நெஞ்சாலை இணைப்பில் வாகனங்கள் சிக்கல் இன்றி செல்ல உரிய ஏற்பாடுகளை செய்ய, அமைச்சர் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குத்தம்பாக்கத்துக்கு மாற்று சாலை அமைப்பதற்கான இடம் தேடும் பணிகளையும், அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். இந்த குறிப்பிட்ட சந்திப்பில் வாகனங்கள் செல்ல சிறப்பு ஏற்பாடுகளை செய்ய நிதி ஒதுக்கி, டெண்டர் கோரும் பணிகளையும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கி உள்ளனர். இதை துவக்க நிலையிலேயே விட்டுவிடாமல், பேருந்து நிலையம் அமைக்கும் முன், நெடுஞ்சாலை இணைப்புக்கான மாற்று சாலைப் பணியையும் முடித்தால் மட்டுமே, இந்த நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் நிலம் - 24.60 ஏக்கர் கட்டட பரப்பளவு - 6.4 லட்சம் சதுர அடி சிறப்பு வசதி - முனைய கட்டடம் முழுதும் குளிர்சாதன வசதி அரசு பேருந்துகள் - 130 ஆம்னி பேருந்துகள் - 85 நிறுத்துமிடம் - 300 பேருந்துகள், 274 கார்கள் கடைகள் - 100