உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெமிலிச்சேரியில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு

நெமிலிச்சேரியில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு

நெமிலிச்சேரி:குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க, நெமிலிச்சேரி ஊராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதால், மூன்று வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சி 1, 5, 6வது வார்டுகளில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மாசிலாமணி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, சி.டி.எச்., சாலை, அம்பேத்கர் நகர், பாலாஜி நகர், அண்ணா தெரு, எம்.ஜி.ஆர்., தெரு, ரயில் நகர், காமராஜர் தெரு மற்றும் அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, அன்னமேடு ஊராட்சி, வாழைத்தோப்பு பகுதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதத்திற்கு முன், நெமிலிச்சேரி சுரங்கப்பாதை அருகில் உள்ள குடிநீர் குழாய் உடைந்தது. அதேபோல, கடந்த 10 நாட்களுக்குமுன் அன்னை இந்திரா நகரில் உள்ள மழைநீர் வடிகால் துார் வாரும் பணியின்போது, நான்கு இடங்களில் 100 மீட்டர் துாரத்திற்கு குழாய் உடைந்துள்ளது. இதனால், குடிநீர் வினியோகிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு, வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையால், மேற்படி மூன்று வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் தலையிட்டு, குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ