கல்வி தான் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்: கலெக்டர்
சோழவரம்,:சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் நேற்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வி சேர்வதற்கான 'கல்லுாரி கனவு' திட்டத்தின் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.இதில், கலெக்டர் பிரதாப் பங்கேற்று பேசியதாவது:ஒரு மாணவன் சமுதாயத்தில் முக்கியமான இலக்கை அடைவதற்கு கல்வி தான் முக்கியம். வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்லும் முக்கியமான கட்டத்தில், தற்போது நீங்கள் இருக்கிறீர்கள். அதற்கான வழிகாட்டி தான் கல்லுாரி கனவு வழிகாட்டுதல் முகாம்.எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில் தடுமாற்றம் இருக்கும். அதை எளிமைபடுத்துவதற்காக தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.உங்களுக்கு வழிகாட்டுவதற்காக சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி என பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். எந்த பாடப்பிரிவு படித்தால், என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.மாணவர்களுக்கு பயன்படும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக, கலெக்டர் அலுவலகத்தில், 'கால் சென்டர்' அமைக்க உள்ளோம். விரைவில் அதற்குரிய தொலைபேசி எண் வெளியிடப்படும். அதில், பாடப்பிரிவுகள் தொடர்பாக, உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழு உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.