உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வங்கி வணிக தொடர்பாளர்கள் இல்லாததால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி

வங்கி வணிக தொடர்பாளர்கள் இல்லாததால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி

திருவாலங்காடு: திருவாலங்காடில் வங்கி வணிக தொடர்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், முதியோருக்கு பென்ஷன் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை, தேசிய வேலை உறுதி திட்ட சம்பளம், விவசாய மானியம் உள்ளிட்டவற்றை பெற்று தருவதற்காக, மாநில அளவில் 4,000க்கும் மேற்பட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் (கஸ்டமர் சர்வீஸ் சென்டர்) உள்ளனர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு இந்தியன் வங்கி, கனகம்மாசத்திரம் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் உள்ள இம்மையங்களில், முதியோர் உதவித்தொகை, வேலை உறுதி திட்டம், விவசாய மானியம் பெற, பயனாளிகளுக்கு வங்கி கணக்கு துவக்குதல், வங்கியில் இருந்து பணத்தை எடுத்து தருதல், நகைக்கடன் பெற்றுத் தருதல் போன்ற சேவைகளை, வங்கி வணிக தொடர்பாளர்கள் செய்து வந்தனர். முதியவருக்கு உதவித் தொகை வழங்க கமிஷனாக, வங்கி மூலம் 24 ரூபாய் வரை வழங்கப்பட்டது. வேலை உறுதி திட்டம், விவசாயிகள் மானியத்திற்கு ஒரு கணக்கிற்கு, 2.50 ரூபாய் வரை கமிஷனாக பெற்று வந்தனர். வங்கி வணிக தொடர்பாளர்களுக்கு, மாதந்தோறும் 15,000 - 20,000 ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. இம்மையங்கள் மூலம் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவிக்தொகைக்கென, வங்கிக்கு 30 ரூபாய் கமிஷனாக தரப்படும். அதிலிருந்து, 24 ரூபாயை அந்தந்த வணிக தொடர்பாளருக்கு வங்கிகள் வழங்கும். இந்நிலையில், தமிழக அரசு முதியோர் உதவிக்தொகைக்கான கமிஷன் தொகையை நிறுத்திவிட்டது. இதனால், வங்கிகள், வணிக தொடர்பாளர் களுக்கு 24 ரூபாய் கமிஷனை வழங்க மறுத்து வருகிறது. அதேபோல், அடல் பென்சன் யோஜனா, விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றை அதிகளவில் பிடிக்க சொல்வதால், வங்கி வணிக தொடர்பாளர்கள் பலரும், தங்கள் பணியில் இருந்து வெளியேறி விட்டனர். இதனால், முதியோர்களுக்கு உரிய நேரத்தில் பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வங்கியில் நீண்ட நேரம் காத்திருந்து, பண பரிவர்த்தனை செய்ய வேண்டியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வங்கி வணிக தொடர்பாளர்களுக்கு நிறுத்தப்பட்ட கமிஷனை மீண்டும் வழங்க, அரசு முன்வர வேண்டும் என, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை