அலுவலர்களிடம் தீர்க்கப்படாத பிரச்னை அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்
திருவள்ளூர், வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், தலைமை தேர்தல் அலுவலர் அளவில் ஏதேனும் தீர்க்கப்படாத சிக்கல்கள் இருந்தால், அதன் பரிந்துரையை, ஏப்., 30க்குள் அனுப்பி வைக்குமாறு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், தலைமை தேர்தல் அலுவலர் அளவில் ஏதேனும் தீர்க்கப்படாத சிக்கல்கள் இருந்தால், அதுதொடர்பான பரிந்துரைகளை, ஏப்., 30ம் தேதிக்குள் வழங்குமாறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.அரசியல் கட்சிகளுக்கு அனுப்பிய தனி கடிதத்தில், தேர்தல் செயல்முறைகளை நிறுவப்பட்ட சட்டத்தின் படி, மேலும் வலுப்படுத்தும் வகையில், கட்சி தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர்களுடன் ஒரே நேரத்தில் கலந்துரையாடல் நடத்தி, பரிந்துரை பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது.கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகளுடன் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்தி, பெறப்படும் கோரிக்கைகள் மீது நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான, உத்தரவு மற்றும் அறிவுறுத்தல் கையேடு இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. எனவே, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவதற்கான பரவலாக்கப்பட்ட, வலுவான மற்றும் வெளிப்படையான சட்ட கட்டமைப்பு நிறுவப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.