மின்மோட்டார்கள் திருட்டு அகூரில் குடிநீர் தட்டுப்பாடு
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கச்சேரி தெரு, பஜனை கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஊராட்சி நிர்வாகம் இரு தெருக்களிலும், தலா ஒரு குடிநீர் தொட்டி, ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக, ஒரு மாதமாக இரு தொட்டிகளுக்கும் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்வதில்லை.இதுகுறித்து ஊராட்சி செயலரிடம், கிராம பகுதிவாசிகள் கேட்ட போது, 'வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குடிநீர் கேளுங்கள்' என, அலட்சியமாக பதில் கூறுகிறார். இதனால், அகூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.'குடிநீர் பிரச்னையை தீர்க்காவிட்டால், காலி குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடுவோம்' என, பகுதிவாசிகள் எச்சரித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.