கோவில் தெருவின் நடுவே மின்கம்பம்: பக்தர்கள் அவதி
பள்ளிப்பட்டு:ஈச்சம்பாடியில் சிவன் கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், தெருவின் நடுவே அமைந்துள்ள மின்கம்பத்தால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.பள்ளிப்பட்டு நகரை ஒட்டி ஈச்சம்பாடி கிராமம் அமைந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி, தென்னந்தோப்புகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கிராமத்தில், சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளன.இங்குள்ள விஜயராகவ பெருமாள் கோவில், 10 ஆண்டுகளுக்கு முன் புனரமைக்கப்பட்டது. இக்கோவிலுக்கு எதிரே சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலும் நீண்ட காலமாக பராமரிப்பின்றி உள்ளது.தற்போது, இந்த கோவிலை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகம விதிகளின்படி கோவில் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்நிலையில், சிவன் கோவில் தெருவின் நடுவே அமைந்துள்ள மின்கம்பத்தால், கட்டுமான பொருட்களை கோவில் வளாகத்திற்கு கொண்ட செல்ல முடியாமல் சிவனடியார்கள் தவித்து வருகின்றனர்.விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் இந்த கோவிலுக்கு வரவும், சுவாமி வீதியுலா எழுந்தருளவும் இந்த மின்கம்பம் இடையூறாக இருக்கும்.எனவே, பக்தர்களின் நலன் கருதி, மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.