பணி நேரத்தில் கொசு புகை அடிப்பு மூச்சு திணறலால் ஊழியர்கள் அவதி
திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில், பணி நேரத்தில் கொசு புகை அடித்ததால், ஊழியர்கள் கடும் அவதிப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மழைநீர் வடிகால்வாய் மற்றும் காலியிடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக, ஆங்காங்கே செடிகள், புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இப்பகுதிகளில், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் பல்வேறு பகுதிகளில் உள்ளன. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், டெங்கு நோய் பரவலை தடுக்கும் வகையில், நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணியை, சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில், கமிஷனர் தாமோதரன் தலைமையில், சுகாதார அலுவலர் மோகன் மற்றும் துாய்மை பணியாளர்கள், அனைத்து அறைகள் மற்றும் வெளி பகுதியில், கொசு புகை மருந்து அடித்தனர். பணி நேரத்தில், கொசு புகை அடிக்கப்பட்டதால், ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேறினர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.