உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 2 நிமிடம் கூட நிற்காத விரைவு ரயில்கள் திருவள்ளூரில் பயணியர் பரிதவிப்பு

2 நிமிடம் கூட நிற்காத விரைவு ரயில்கள் திருவள்ளூரில் பயணியர் பரிதவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் விரைவு ரயில்கள், நிர்ணயிக்கப்பட்ட இரண்டு நிமிடம் கூட நிற்காமல், உடனே புறப்பட்டு விடுவதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தில் மும்பை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு, தினமும் ஏராளமான விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. அவற்றில், சேலம், திருப்பதி, பாலக்காடு உள்ளிட்ட 11 விரைவு ரயில்கள் மட்டும், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. விரைவு ரயில்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நிறுத்துவதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அனைத்து விரைவு ரயில்களும், ஒன்று அல்லது ஒன்றரை நிமிடத்தில் புறப்பட்டு விடுகின்றன. இதனால், பயணியர் ரயிலில் ஏற முடியாமல் கடும் அவதிப் படுகின்றனர். இதுகுறித்து, திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க தலைவர் பாஸ்கர் கூறியதாவது: திருவள்ளூரில் விரைவு ரயில்கள், இரண்டு நிமிடம் கூட நிற்காமல், உடனடியாக புறப்பட்டு விடுகிறது. நான்கு நாட்களாக, பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணியர், குறிப்பிட்ட நேரம் வரை ரயில் நிற்காமல் புறப்பட்டதால், ரயிலில் ஏற முடியாமல் ஏமாற்றமடைந்தனர். மேலும், ரயில் கார்டு, பயணியர் நிற்கும் நடைமேடையை கவனிக்காமல், எதிர் பகுதியில் நின்று சிக்னல் கிடைத்தும், ரயில் புறப்பட ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கிறார். அவரும், உடனடியாக ரயிலை இயக்குகிறார். சென்னை கோட்ட மேலாளர் கவனத்திற்கு இத்தகவலை கொண்டு சென்றுள்ளோம். ரயில் பயணியர் நலன் கருதி, இரண்டு நிமிடம் வரை ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி