ஆக்கிரமிப்பால் நிலத்திற்கு செல்ல வழியில்லை ஹெலிகாப்டர் கேட்டு விவசாயி மனு அளிப்பு
பொன்னேரி :பொன்னேரி அடுத்த லிங்கப்பையன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவருக்கு சொந்தமான, 15 ஏக்கர் விவசாய நிலம், மடிமைகண்டிகை கிராமத்தில் உள்ளது.இந்த விவசாய நிலங்களுக்கு சென்று வருவதற்கான வண்டிப்பாதை தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும், மழைநீர் கால்வாயாகவும் மாறியுள்ளது. இதனால், விவசாய பணிகளை மிகுந்த சிரமத்திற்கு இடையே செய்து வருகிறார்.மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கடந்த 10 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்து உள்ளார்.அதில், 'தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று வரும் பாதை ஆக்கிரமிப்பில் இருப்பதால், விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஹெலிகாப்டர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டு கொள்கிறேன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயி கோட்டீஸ்வரன் கூறியதாவது:உள்ளூர் அதிகாரி முதல், தமிழக உயரதிகாரிகள் வரை மனு அளித்துவிட்டேன். எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய நிலம் கடைசியில் இருப்பதால் டிராக்டர், அறுவடை இயந்திரம் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல முடிவதில்லை.வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து வண்டி பாதை ஆக்கிரமிப்புகள் இருப்பது குறித்து கண்டறிந்தும், அவற்றை அகற்றாமல் உள்ளனர். விவசாயம் சரிவர செய்ய முடியாமல் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.