பராமரிப்பு இல்லாத தடுப்பணை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
பொன்னேரி, கால்வாயின் குறுக்கே உள்ள தடுப்பணையில் செடிகள் வளர்ந்து, பராமரிப்பின்றி உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரி அடுத்த சத்திரம் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு இடையே மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கப்படாததால், தடுப்பணை முழுதும் செடிகள் வளர்ந்தும், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது. தடுப்பணையின் கான்கிரீட் கட்டுமானங்களுக்கு இடையே செடிகள் வளர்ந்து வருவதால், பலவீனம் அடைந்து வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, தேவையான நேரங்களில் விளைநிலங்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, பராமரிப்பு இல்லாததால், மழைநீரை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், தடுப்பணையை சீரமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.