வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விழுப்புரம் மாவட்டமும் அதே நிலைமைதான்.......
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்தாண்டு 'பெஞ்சல்' புயலால், விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர் தண்ணீரில் மூழ்கின. வேளாண் துறையினர் பாதித்த விவசாயிகள் குறித்த பட்டியல் தயாரித்து, மாவட்ட நிர்வாகம் வாயிலாக, நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு அனுப்பி மூன்று மாதங்கள் ஆகியும் எப்போது இழப்பீடு கிடைக்கும் என, விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இம்முறையும், பயிரிட்ட நெற்பயிரை நஷ்டத்திற்கு அறுவடை செய்து வருகிறோம் என, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் மொத்தம், 526 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகளில் விவசாயிகள் அதிகளவில் நெல் பயிரிட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த சம்பா பருவத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, கடம்பத்தூர், மீஞ்சூர், சோழவரம், பூண்டி, எல்லாபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில், மொத்தம், 90 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர்.மேலும், கரும்பு, வாழை, காய்கறி, பூ உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள், 2,000 ஏக்கர் பரப்பிலும் விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர்.இந்நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழை மற்றும் நவம்பர் மாதம் 'பெஞ்சல்' புயலால் பெய்த கனமழையால் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெற்பயிர், கரும்பு, வேர்க்கடலை, காய்கறி, பூ போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் வெள்ளத்தால் பயிர்கள் அடித்துச் செல்லப் பட்டன. இதில் அதிகளவில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது.இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி, வேளாண் மற்றும் வருவாய் துறையினர் சேதமடைந்த, பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.இதில் மாவட்டத்தில், 32,500 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் எண்ணிக்கை மற்றும் பயிர் சேதம் குறித்து பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.குறிப்பாக, பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சோழவரம் பகுதிகளில், அதிகளவில் நெல் வயல்களில் தண்ணீர் மூழ்கி உள்ளன. மீஞ்சூர் பகுதியில் மட்டும், 17,500 ஏக்கர் நெல் பயிர்கள், வெள்ளத்தில் மூழ்கி சேதமாகின.தோட்டக்கலை பயிர்களான, கரும்பு, வாழை, மலர், காய்கறிகள் என, 250 ஏக்கர் சேதமடைந்துள்ளன. ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு, 17,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, வேளாண் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.ஆனால், மூன்று மாதம் ஆகிய நிலையிலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனால், நெற்பயிட்ட விவசாயிகள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து, திருவாலங்காடு பகுதி விவசாயிகள் கூறியதாவது:பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நெற்பயிர் செய்திருந்தோம். பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளோம்.பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கியும் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. வேளாண் அதிகாரிகளிடம் கேட்டாலும் விரைவில் வழங்கப்படும் வெறும் பதில் கூறுகின்றனர்.அரசின் நிவாரணம் போதுமானதாக இல்லாவிட்டாலும் அந்த நிவாரணமும் எப்போது கிடைக்கும் என, ஏக்கத்தில் உள்ளோம்.கடன் வாங்கி பயிரிட்டுள்ளோம். இந்த முறையும் நஷ்டத்தில் நெல் அறுவடை செய்ய உள்ளோம். வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் புதியதாக பயிர் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்களின் கஷ்டத்தை உணர்ந்து உடனடியாக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அனைத்து வட்டாரங்களில் இருந்தும் பயிர் பாதிப்பு சம்பந்தமான தகவலை அரசுக்கு அளித்து விட்டோம். இன்னும் சில நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரண நிதி கிடைக்க உள்ளது' என்றார்.
விழுப்புரம் மாவட்டமும் அதே நிலைமைதான்.......