செப்டிக் டேங்க்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அச்சம்
ஊத்துக்கோட்டை:அதிகளவு பயணியர் வந்து செல்லும் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையின், 'செப்டிக் டேங்க்'கில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்வோர், பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர், நடத்துநர்கள், ஓட்டுநர்கள் இயற்கை உபாதை கழிக்க, சமீபத்தில், 20.64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், 'செப்டிக் டேங்க்'கில் சேகரமாகிறது. தற்போது, இந்த தொட்டி நிரம்பி, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கண்டும், காணாமல் உள்ளது. எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையத்தில் வெளியேறும் கழிவுநீரை கட்டுப்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.