ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
பொன்னேரி:பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் கோட்டைகுப்பம், ஆண்டிகுப்பம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு மீனவ கிராமத்தினரும் சுழற்சி முறையிலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மீன் பிடிப்பதற்கான 'பாடு' என்கிற எல்லையையும் பின்பற்றுகின்றனர்.இந்நிலையில், ஆண்டிகுப்பத்தைச் சேர்ந்த இருதரப்பு மீனவர்கள் இந்த முறையை பின்பற்றுவதில் பிரச்னை ஏற்பட்டது. கடந்தாண்டு துவக்கத்தில், பல்வேறு மோதல் சம்பவங்களும் நடைபெற்றன. இதில், ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.இதையடுத்து, இந்த மீனவ கிராமத்தினருக்கு 'பாடு' எல்லையை வரையறுத்து தரும்படி, மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களான நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நேற்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய், மீன்வளம் மற்றும் காவல்துறையினர் பேச்சு நடத்தினர். 'நாளை இருதரப்பு மீனவர்களிடம் பேச்சு நடத்தி, இதற்கு தீர்வு காணப்படும்' என உறுதியளித்தனர். இதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.