குடியிருப்புகளில் வெள்ளநீர்: பழங்குடியின மக்கள் பாதிப்பு
இருளஞ்சேரி: கடம்பத்துார் ஒன்றியத்தில் அமைந்துள்ளது இருளஞ்சேரி ஊராட்சி. இங்கு, கடந்த 2022 - 23ம் ஆண்டு பழங்குடியின மக்களுக்கு, தலா 4.30 லட்சம் ரூபாய் மதிப்பில் 32 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. கூவம் ஏரியிலிருந்து இருளஞ்சேரி, குமாரசேரி, கொண்டஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள நீர்வரத்துக் கால்வாய் வழியே, மீண்டும் கூவம் ஆற்றுக்கு செல்லும் வகையில் நீர் வரத்து கால்வாய் இருந்தது. இந்த நீர்வரத்து கால்வாய் பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் சிக்கி, குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களாக மாறி விட்டதால், கூவம் ஆற்றுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையில், கூவம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர், பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதியில், 3 அடி வரை வெள்ளநீர் வழிந்தோடுகிறது. இதனால், வீட்டிற்குள் நீர் புகுந்து, அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பழங்குடியின மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.