சித்த மருத்துவமனை கட்டடத்திற்கு அடிக்கல்
திருத்தணி: திருத்தணி தலைமை மருத்துவமனையில், சித்த மருத்துவமனை பிரிவுக்கு கட்டடம் அமைக்க, எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். திருத்தணி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, தினமும் திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, திருத்தணி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், சித்தா பிரிவுக்கும் அதிகளவிலான மக்கள் வருகின்றனர். எனவே சித்தா பிரிவுக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர். நேற்று, தேசிய ஆயுஷ் மிஷன் திட்டத்தின் கீழ் 37.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்தா பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில், அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.